பெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் உள்ள மர்மமான ஒரு கடல் பகுதி. பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து பியோர்ட்டோ ரிக்காவின் சாண் ஜீவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் முக்கோணப்பகுதிதான் பெர்முடா முக்கோணம்!
அந்தப் பகுதியில் நிறைய கப்பல்களும் விமானங்களும் காணாமல் போவதாகச் சொல்லப்படுகிறது. இந்த மர்மத்தைப் பற்றி முதன்முதலாக 1950 ஆம் ஆண்டு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இது பற்றிய இரண்டாவது கட்டுரை வெளியானது. பிளைட் 19 ரக விமானங்கள் ஐந்து, அந்தப் பகுதியில் பயிற்சியில் இருந்தபோது காணாமல் போனதாகவும், அந்த விமானங்களில் ஒன்றில் இருந்த ஒரு கேப்டன், “நாங்க இப்போ வெள்ளைக் கலர்ல இருக்கற தண்ணிக்குள்ள போயிட்டிருக்கோம்.. இல்ல… இல்ல.. இந்தத் தண்ணி பச்சையா இருக்கு..” என்று சொன்னது பதிவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த விமானங்களின் திசைகாட்டியும் தாறுமாறாக அப்போது வேலை செய்திருக்கிறதாம். அவர்களைத் தேடிச் சென்ற இன்னொரு விமானமும் மர்மமான முறையில் காணாமல் போயிருக்கிறது. இது பற்றி விசாரணை செய்த அதிகாரிகள், விமானங்கள் அனைத்தும் செவ்வாய் கிரகத்துக்கு பறந்து சென்றதாகச் சொன்னதாகவும் ஒரு தகவல் உண்டு.
பிறகென்ன, அதன் பிறகு அந்த இடத்தைப் பற்றி ஆவி, பூதம், பேய், ஏலியன்ஸ் என இது தொடர்புடைய நிறையக் கட்டுக்கதைகள் உலாவரத்தொடங்கிவிட்டன.
உண்மையில், கடல் பகுதியில் ஏற்பட்ட பல விபத்துகளை பெர்முடா முக்கோணப் பகுதியில் நிகழ்ந்ததாகத் திரித்து சொல்லப்பட்டிருப்பதாகவும், அதற்கான நிறைய விளக்கங்களையும் பல ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். பல சம்பவங்கள் நடைபெறாமலே நடந்ததாகக் கதை கட்டப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். உதாரணமாக 1937 ஆம் ஆண்டு ஃப்ளோரிடா கடற்கரைப் பகுதியில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானதை நிறைய நபர்கள் பார்த்ததாக பதிவு செய்திருக்கிறார்கள். எனினும் அது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் செய்தித்தாள்களில் வெளியாகியிருக்கவில்லை.
அந்தப் பகுதிக்குள் நுழையும் எந்தப் பொருளுமே காணாமல் போகவில்லை, எல்லாப் பொருட்களுமே அணுக்களாக மாறி காற்றோடு கலந்துவிடுகின்றன என்பது போன்று ஏகப்பட்ட அனுமானங்கள். விஞ்ஞான ரீதியாகவும் இது குறித்து பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளில், மீத்தேன் ஹைட்ராய்டு எனும் இயற்கை எரிவாயு நீரின் அடர்த்தியைக் குறைத்து கப்பல் நீரில் மிதக்க முடியாமல் செய்துவிடுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும் பெர்முடா பகுதியில் மீத்தேன் ஹைட்ராய்டின் எந்தத் தாக்கமும் எப்போதும் இருந்திருக்கவில்லை.
கடலில் உருவாகும் பயங்கர சூறாவளிகள் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. சுனாமி அலைகள் போன்ற இராட்சச அலைகள் உருவாகி, கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடித்திருக்கலாம் எனவும் கருதுகிறார்கள்.
பெர்முடாவின் ஏதாவதொரு மையப்பகுதியில், ஈர்ப்புவிசை மிகவும் அதிகமாக இருப்பதால் அங்கு எல்லாப் பொருட்களும் ஈர்க்கப்படுவதாகவும் ஒரு அனுமானம் உண்டு. மேலும் கடற்கொள்ளையர்கள் கூட இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
பெர்முடா முக்கோணத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சில சம்பவங்கள்:
- பிளைட் 19 எனும் விமானம் காணாமல் போனதும் அதனைத் தேடிச் சென்ற 13 பேர் அடங்கிய குழுவும் காணாமல் போனதாகத் தகவல் உண்டு. ஆனால் இது குறித்துக் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் எதுவும் துல்லியமாக இல்லை.
- மேரி செலஸ்டின் எனும் கப்பல் 1872 ஆம் ஆண்டு மர்மமான முறையில் காணாமல் போனது. பெர்முடா முக்கோணம்தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. எனினும் 1860 ஆம் ஆண்டு இதே பெயரில் அந்தப் பகுதியில் ஒரு கப்பல் மூழ்கியதை இத்துடன் இணைத்துக் குழப்பிக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.
- 1881 ஆம் ஆண்டு எலன் ஆஸ்டின் என்ற நபர் நடுக்கடலில் ஒரு கப்பல் வந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். மீட்புப்படையினரை அனுப்பி அதை மீட்க முயற்சி செய்துகொண்டிருக்கும் போதே, அது காணாமல் போனதாகச் சொல்லப்படுகிறது.
எனினும் சமீபத்தில் கார்ல் க்ருஷெல்னிக் எனும் விஞ்ஞானி இந்த பெர்முடா முக்கோண ரகசியத்தை உடைத்த பெருமையைப் பெற்றவராகிறார்.
மனிதக் காரணிகள், மோசமான வானிலை மாற்றங்கள், அப்பகுதியில் நிலவிவரும் சீதோஷ்ண நிலை மாறுதல்கள், அப்பகுதியில் இருக்கும் நீரோடைகளின் இயல்புகள், அப்பகுதியில் கடலுக்கடியில் உள்ள நில அமைப்புகள் இவையே விபத்துகளுக்குக் காரணம் என ஆதாரத்துடன் அவர் நிரூபித்திருக்கிறார். மேலும் இவர் குறிப்பிட்ட காரணங்கள் எப்படிப்பட்ட பாதுகாப்புக் காரணிகளுடன் கூடிய கப்பல்களையும், விமானங்களையும் கூட பாதிப்புக்கு உள்ளாக்கும் என மற்ற விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொண்டனர்.
எனவே பெர்முடா முக்கோணத்தில் நிகழ்வது விபத்து!!! மட்டுமே….மர்மமல்ல!!!
January 11, 2019 — magnon