5000 மொழிகளுக்கு மேல் பேசப்படும் இவ்வுலகில், ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய எழுத்து வடிவமும், ஒரு மொழிக்குள்ளேயே பேசப்படும் பல்வேறு வட்டார வழக்குகளும் இருக்கின்றன. இந்த மொழிகளில் பெரும்பாலானவை பல்வேறு பூகோள அமைப்புகளுக்குள்ளும், அந்த மொழி பேசும் இன மக்களிடமும் சுருங்கிக் கிடக்கின்றன. ஆனால் உலகமயமாக்கலின் விளைவாக உலகமே ஒரு சிறு கிராமம் போல் மாறியிருக்கும் இந்த நூற்றாண்டில், அனைத்து மொழிகளுக்குரிய முக்கியத்துவமும் மெல்ல உணரப்பட்டு வருகிறது. ஒரு மொழி பேசும் மக்களுடன் கலந்துரையாட, அவர்களைத் தொடர்புகொள்ள அந்த மொழியைப் பயன்படுத்துவதே பலன்தரும் என்பதை உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது.
2000த்திலிருந்து, கடந்த 18 ஆண்டுகளில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அரபு நாடுகள் போன்ற இடங்களில் இணையத்தின் தாக்கமும் வளர்ச்சியும் பல ஆயிரம் மடங்கு பெருகியிருக்கிறது. இந்த வளர்ச்சி, பல கோடி மக்களை இணையத்துடன் இணைந்திருக்கிறது. இது இணையம் மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்திற்குப் பெரும் காரணியாக இருப்பதுடன், கோடிக்கணக்கான நுகரும் மக்களைக் கொண்டிருக்கும் பெரும் வணிக வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் மொழி ஒரு பெரிய தடையாக இருப்பது சமீபகலமாக பெருநிறுவனங்களுக்குப் பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. இந்த சவால், அந்த மொழி பேசும் மக்களிடம் தங்கள் பொருட்களைக் கொண்டுசெல்லும் வழிகளை அந்நிறுவனங்களை ஆராய வைத்திருக்கிறது.
இதைப் போன்ற வர்த்தக வாய்ப்புகள் குவிந்துகிடக்கும் இடங்களில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் விளைவாக அம்மக்களிடம் அடிப்படை ஆங்கில அறிவு ஓரளவு இருக்கிறது. இது, தங்கள் பொருட்களையும் சேவைகளையும் அம்மக்களிடம் எடுத்துச்செல்ல ஆங்கிலத்தையே பயன்படுத்துவதா, இல்லை உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதா என்று சில பெருநிறுவனங்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சில நிறுவனங்கள் தங்கள் பொருட்களையும், சேவைகளையும் ஆங்கிலத்திலேயே வைத்து வணிகம் செய்து, பெரும் தோல்வி கண்ட நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. இப்படிப்பட்ட சில நிகழ்வுகளால் விழித்துக்கொண்ட பெருநிறுவனங்கள், இப்போது தங்கள் பொருட்களையும் சேவைகளையும் உள்ளூர் மொழிகளிலும் சந்தைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.
தங்கள் மொழியில் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தை மக்கள் விரும்புகிறார்களா?
பெருநிறுவனங்கள் மேற்கொள்ளும் வர்த்தகத்தில் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருக்கும் பொருட்களையும், சேவைகளையும் விட, தங்கள் மொழியில் இருப்பவற்றை மக்கள் அதிகம் விரும்பிப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அத்துடன் இத்தாலியில் மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், நன்றாக ஆங்கிலம் தெரிந்த மாணவர்கள்கூட இத்தாலிய மொழியில் இருக்கும் பொருட்களையே விரும்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இணையத்தில் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தில், ஒரே மொழி பேசும் மக்களில் பெரும்பாலானோர் தங்கள் மொழியில் பெயரிடப்பட்டிருக்கும் பொருட்களையே வாங்குகிறார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மொழி இன்னும் எவ்வாறெல்லாம் பயன்படுகிறது?
ஒரு பொருளோ சேவையோ, அந்த மக்களின் சொந்த மொழியில் இருப்பது, அந்நிறுவனத்தின் மீதும், அந்தப் பொருட்களின் மீதும் ஒருவித நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் அந்த மக்களிடையே உருவாக்குகிறது.
இது, உலகளாவிய வணிகத்திலும் இணைய வர்த்தகத்திலும், மொழி எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறது. மொழிகளின் முக்கியத்துவமும், மொழியைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தின் பொருட்களையும் சேவைகளையும் எந்த அளவிற்கு மக்களிடையே கொண்டு செல்லமுடியும் என்பதையும் இது போன்ற ஆய்வு முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன. இதை உணர்ந்த Google, Microsoft, Facebook, Amazon, Flipkart, போன்ற பல பெருநிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைப் பல்வேறு இந்திய மொழிகளில் கொண்டுவரும் பெரு முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இது மொழியாக்கத்திற்கான மிகப்பெரிய சந்தையை உருவாக்கியிருப்பதுடன், பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு பெரும் தொழிலாகவும் மாறியிருக்கிறது.
இப்படிப்பட்ட ஓர் அறிய வாய்ப்பை நீங்கள் மட்டும் பயன்படுத்தாமல் விட்டுவிடுவீர்களா என்ன?
மேற்கோள் ஆதாரங்கள்/குறிப்புகள்
[1] https://www.internetworldstats.com/stats.htm
[2] Can’t Read, Won’t Buy: Why Language Matters on Global Websites By Donald A. DePalma, Benjamin B. Sargent, and Renato S. Beninatto September 2006
[3] Cross-Cultural Consumer Behavior: Use of Local Language for Market Communication—A Study in Region Friuli Venezia Giulia (Italy) by Franco Rosa, Sandro Sillani & Michela Vasciaveo
Pages 621-648 | Journal of Food Products Marketing Volume 23, 2017 – Issue 6
[4] User language preferences online; Survey conducted by The Gallup Organization, Hungary upon the request of Directorate-General Information Society and Media
[5] The Influence of Language of Advertising on Customer Patronage Intention: Testing Moderation Effects of Race Muhammad Sabbir Rahman, Fadi Abdel Muniem Abdel Fattah, 1 2
Nuraihan Mat Daud and Osman Mohamad ; Middle-East Journal of Scientific Research 20 (Language for Communication and Learning): 67-74, 2014
September 5, 2018 — magnon