புதிய மொழியைத் தெரிந்துகொள்வது பற்றி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானியப் பேரரசர் சார்லஸ் “புதிய மொழியைக் கற்பது புதிய ஆன்மாவைப் பெறுவதற்கு நிகரானது” என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது இருபத்தியோராம் நூற்றாண்டில், புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் ஜெஃப்ரி வில்லியன்ஸ் “இரண்டு வெவ்வேறு மொழிகள் தெரியாமல் உங்களால் ஒரு மொழியை முழுமையாகப் புரிந்துகொள்ளவே முடியாது” என்கிறார்.
உலகின் எல்லா மொழிகளும் தனித்தன்மை வாய்ந்தவை. லத்தீன், தமிழ், சமஸ்கிருதம், பாரசீகம், அரபு போன்ற பல தொன்மையான மொழிகளிலிருந்து பல்வேறு மொழிகள் பிறந்திருந்தாலும் இன்றைக்கு அவையனைத்துமே தனிச்சிறப்புமிக்கவையாக இருக்கின்றன. புதிய பல மொழிகளைத் தெரிந்துகொள்வது நம் மூலையில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் வேலைவாய்ப்பிலும் நமக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்
சமூக வாழ்க்கை
ஒரு புதிய மொழியைக் கற்பது என்பது நம் மூளையின் செயல்திறனை அதிகரிப்பதோடு மொழி மற்றும் அது சார்ந்த கலாச்சாரத்தையும் பழமையையும் இலக்கிய வளத்தையும் நமக்கு உணர்த்துகிறது. நாம் பல மொழிகளைத் தெரிந்துவைத்திருந்தாலும் நம்மில் பலர் அவரவர் தாய்மொழியின் வழியாகவே அம்மொழிகளைப் புரிந்துகொள்கிறோம். இந்தப் பழக்கம் நாம் ஒரே நேரத்தில் பல்வேறுபட்ட வேலைகளை, திறம்படவும் விரைவாகவும் செய்ய வழிவகை செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் முனைவர். வையோரிக்கா மரியான் மற்றும் அந்தோனி ஷூக் ஆகியோர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இது நாம் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்ய (Multi-tasking) நம் மூளையை ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அது மட்டுமின்றி வேறு மொழி பேசும் மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை போன்றவற்றையும் நாம் அறிந்துகொள்ளமுடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைத் தெரிந்துகொள்வதால், அம்மொழி பேசும் மக்களுடன் நெருங்கிப் பழக முடிவதுடன் பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களுக்கும் பெரிதும் உதவிகரமாகவும் இருக்கிறது.
வேலை வாய்ப்பு
நீங்கள் பல மொழிகளைத் தெரிந்துவைத்திருப்பது உங்களின் வேலை வாய்ப்பில் பெரிதும் உதவுவதோடு உடன் பணிபுரியும் பிறமொழி பேசுபவர்களிடம் பேசிப் பழகுவதும் மிகவும் எளிதாகிறது. இது பணியிடத்தில் கூடுதல் திறனாகப் பார்க்கப்பட்டு உங்கள் மதிப்பு உயர்வதோடு உங்களின் பணியுயர்விலும் வருவாயிலும் சாதமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைத் தெரிந்துவைத்திருப்பவர்களுக்கு சுற்றுலாத்துறை, கல்வித்துறை, பத்திரிக்கைத் துறை, மொழி பெயர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன.
சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகளுடனும், வெளிமாநிலத்தவருடனும் உள்ளூர் வாசிகள் தொடர்பு கொண்டு பேசவும், அவர்களுக்கு வழிகாட்டவும், சுற்றுலாத் தலங்களைப் பற்றி விளக்கவும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைத் தெரிந்துவைத்திருப்பது பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
புதிய மொழிகளைக் கற்பதால் ஏற்படும் நன்மைகள் என்று நாங்கள் கூறியவற்றை ஏற்கிறீர்களா? வேறு ஏதேனும் கூற விரும்பினால் கீழே உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். உங்களின் கருத்து எங்களுக்கு மிகவும் முக்கியம்.
மேற்கோள் ஆதாரங்கள் / குறிப்புகள்:
[1] Marian, V., & Shook, A. (2012). The cognitive benefits of being bilingual. Cerebrum : the Dana forum on brain science, 2012, 13.
December 26, 2018 — magnon