ஒரு உள்ளூர்மயமாக்குதல் நிறுவனமாக நாங்கள் உள்ளடக்கத்தை எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம், படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையில் அதன் சாரம் கெடாமல் மொழிபெயர்க்கிறோம். இதில் எப்போதுமே சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக ஒரு பிரபலமான கவிதையை மொழிபெயர்ப்பதைக் கூறலாம். ஒரு கவிதையைப் பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டுமெனில், அதே உணர்ச்சியும் தீவிரமும் வெளிப்படுமாறு அதனைச் செய்வது எப்படி? இத்தகைய சூழல்களில் Magnonனின் அணுகுமுறை எப்படி இருக்கும் எனக் காண்போம்.
ஒரு கவிதையை உள்ளூர்மயமாக்குதலை மொழிபெயர்ப்பின் படைப்புருவாக்க வடிவத்திற்கு உதாரணமாகக் கூறலாம், இதனை ‘மொழியாக்கம்’ என்கிறோம். அதனைத் திறம்படச் செய்ய, ஒரு மொழிபெயர்ப்பாளர் எனும் மனநிலையிலிருந்து விலகி ஒரு படைப்பாளியின் மனநிலையில் சிந்திக்க வேண்டும். மொழியாக்கம் செய்யும் போது நாங்கள் எங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் சில கேள்விகளைக் காண்போம்.
- படைப்பின் சாரம் என்ன? அதில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் தொனித்தாலும் கூட, அவற்றின் உண்மையான அர்த்தம் வேறாக இருக்கக் கூடும். உண்மையில் பல புகழ்பெற்ற கவிதைகளில் இது வழக்கமான ஒன்றுதான். எனவே கவிதையின் சரியான சாரத்தைப் புரிந்துகொள்வதற்கு, அதன் வரலாற்றுப் பின்னணியையும் அறிந்து கொள்வது எப்போதுமே உதவிகரமானது.
- படைப்பின் தொனி என்ன? அது ஆக்ரோஷமானதா மென்மையானதா? மறைமுகமானதா நேரடியானதா? நாட்டுப்புறப் பாடல் வடிவில் இருக்கிறதா பக்திப்பாடல் வடிவில் இருக்கிறதா?
- யாரை அது சென்றடைகிறது? பாமரருக்கா கல்வியறிவு உடையவருக்கா? அது யாரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டதோ அவரைச் சென்றடையுமா? அவ்வாறு இல்லையெனில் அதனை எளிமையாக்க முடியுமா?
- நமது வாசகர்களின் கலாச்சாரத்துடன் மூல எழுத்தில் எவை எல்லாம் ஒத்துப்போகின்றன, எவை ஒத்துப்போகவில்லை? மூல எழுத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கவித்துவமான வார்த்தைப் பிரயோகங்களை நமது வாசகர்களால் புரிந்து கொள்ள இயலுமா? அவ்வாறு இயலாதெனில், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உரிச்சொற்கள், குறிப்புகள் அல்லது உவமைகளை மாற்ற முடியுமா?
- அதில் உள்ள வார்த்தைகள் வாசகர்களுக்கு என்னவிதமான உணர்ச்சியை வழங்கும்? இந்தக் கேள்வி, மேற்கண்ட இரண்டாவது கேள்வியுடன் தொடர்புடையது, இது நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளையும் அவற்றின் கட்டமைப்பையும் முடிவு செய்ய உதவும்.
இந்த கேள்விகளுக்கான பதில்களை வைத்து மூல உள்ளடக்கத்தை நன்கு புரிந்துகொண்டபின், நாங்கள் ஒரு படைப்பாளியாக உருவெடுத்து நமது மொழியில் இயல்பாக எழுதப்பட்டதைப் போல எழுத முயல்கிறோம். எனவே இதனை மொழிபெயர்ப்புப் பணி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, வேறு மொழியின் படைப்பால் ஈர்க்கப்பட்டு அதனை நமது மொழியில் சுயமாகப் படைப்பது எனக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறான மொழியாக்கம் நமது வாசகர்களுக்குத் தொடர்புடைய வார்த்தைகள், உணர்ச்சிகள் மற்றும் உதாரணங்களைக் கொண்டதாக இருப்பதோடு, மூல மொழியின் அடிநாதமாக இருக்கும் அதே உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்!
ஒரு மொழிபெயர்ப்பாளர் இந்த நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளாமல் மொழிபெயர்த்தால், அந்த உள்ளடக்கம் சிலநேரங்களில் தட்டையான மொழிபெயர்ப்பாகவோ, சிலநேரங்களில் சிரிப்பை வரவழைக்கும் விதத்திலோ கூட அமைந்துவிடும்.
ஒரு கவிதையையோ இலக்கியத்தையோ மொழியாக்கம் செய்யும் சூழல் தினமும் அமையாது. ஆனால் விளம்பரங்கள், வலைதளங்கள், மார்க்கெட்டிங் உள்ளடக்கம், பொழுதுபோக்கு உள்ளடக்கத்திற்கான சப்டைட்டில்கள் முதலியனவற்றில் மொழியாக்கம் தேவைப்படுகிறது. அத்தகைய சூழல்களில் கலாச்சாரம், வரம்புகள்.. ஏன் மொழிகளையும் கூடக் கடந்து மொழியாக்கம் செய்ய வேண்டியது வர்த்தக வெற்றிக்கு அவசியமாகிறது.
அனைத்திற்கும் மேலாக மனித உணர்வுகள் மொழிசார்ந்த தடைகளையும் கடந்த ஒன்றல்லவா! எனவேதான் சரியாகத் தழுவி எழுதப்பட்ட ஒரு மொழியாக்கத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதே களிப்பு, அதே வலி, அதே ஊக்கம் மற்றும் அதே உணர்வுகளைப் பெறுவார்கள் எனலாம்.
தமிழில் சுப்ரமணிய பாரதி, இந்தியில் பியூஷ் மிஸ்ரா, தெலுங்கில் வேமனா அல்லது கன்னடத்தில் K.S. நரசிம்மசுவாமி என யாருடைய படைப்பாக இருப்பினும், மனிதத்தை ஊக்கப்படுத்துவதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாதல்லவா? எனவேதான் நாங்கள் பிறமொழி பேசும் மக்களிடமும் அவர்களின் கருத்துகளை அவர்கள் கூறிய உணர்ச்சியுடனும் தொனியுடனும் கடத்துவதற்கு முயன்றுவருகிறோம்.
நீங்கள் படித்ததில் சிறந்த மொழியாக்கம் மற்றும் மோசமான மொழியாக்கம் குறித்து எங்களிடம் கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது கருத்துக்காகக் காத்திருக்கிறோம்!
December 11, 2018 — magnon