பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரினமும் உணவு, தூக்கம், இனப்பெருக்கம் மற்றும் சுய-பாதுகாப்பு முதலியவற்றை முதன்மையாகக் கருதுகின்றது. இந்த உள்ளுணர்வுகளைத் தாண்டி மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது. மனிதனுடன் ஒப்பிடுகையில் யானை அளவில் பெரியது, எனினும் அதன் மூளையால் ஒரு வரம்பிற்குமேல் சிந்திக்க முடியாது. ஆனால், மனித மூளை தோராயமாக 70,000 ஆண்டு பரிணாம வளர்ச்சியில் வரம்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இது சில சமயங்களில் ‘அறிவாற்றல் புரட்சி’ என அழைக்கப்படுகிறது. தங்களது மூளையின் ஆற்றலின் மூலமாக மனிதர்கள் நிலையான இருப்பிடங்களில் குடியேறியதோடு, அவர்கள் தங்களது சூழலைப்
பற்றியும் அறிந்து கொள்ளத் துவங்கினர். அவர்கள் பெற்ற அறிவை சக மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அந்தப் பகிர்தல் ‘சமிக்ஞை’ வடிவில் இருந்தது. அது ‘சமிக்ஞை மொழி’ என அழைக்கப்படுகிறது. பின்னர் அது ‘வார்த்தைகள்’ வடிவமாக மாறி, அது ‘மொழி’ என அறியப்படுகிறது. ஆரம்பத்தில் மொழிக்கென்று எந்த எழுத்து வடிவமும் இல்லாமல் இருந்தது. பின்னர் மொழியின் பரிணாம வளர்ச்சியில் மொழியியலாளர்கள் அதற்கென வடிவத்தை உருவாக்கினர். உலகில் முதலில் தோன்றிய மொழி எது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவுமில்லை. ஏனெனில் அறிவாற்றல் புரட்சிக்கு பின்னர் ஆரம்ப கட்டத்தில் மனிதன் பல மொழிகளை உருவாக்கினான். எனினும் அவற்றில் பலவும் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நிலைக்கவில்லை. எனவே இந்த மொழிதான் முதலில் தோன்றியது என வரையறுப்பது சாத்தியமற்ற ஒன்று. எனினும் பயன்பாட்டில் இருக்கும் மொழிகளில் எது நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே வழக்கில் உள்ளது என்பதை நாம் தோராயமாக மதிப்பிட முடியும்.
இந்தியாவில் மொழிகள்
தற்போதைய உலக மக்கள்தொகை சுமார் 770 கோடி ஆகும். அதில் ஐயாயிரத்திற்கும் அதிகமான மொழிகளை மக்கள் பேசுகின்றனர். நமது நாட்டின் மக்கள்தொகை சுமார் 130 கோடி. அதில் 780க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக People’s Linguistic Survey of India (PLSI) கூறுகிறது. இந்த சர்வே 2010 மற்றும் 2013 ஆண்டுகளுக்கு இடையில் எடுக்கப்பட்டது. 1961ஆம் ஆண்டில் தோராயமாக 1650 மொழிகள் வரை பேசப்பட்டன. எனினும் ஒவ்வொரு ஆண்டும் பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை ஐநூறுக்கும் குறைவாகப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்திய அரசியலமைப்பு, அதன் 8வது அட்டவணையில், 22 ‘அதிகாரப்பூர்வ மொழிகளுக்கு’ அங்கீகாரம் அளித்துள்ளது. அவை: 1) அஸ்ஸாமி 2) பெங்காலி 3) போடோ 4) டோக்ரி 5) குஜராத்தி 6) இந்தி 7) கன்னடம் 8) காஷ்மீரி 9) கொங்கனி 10) மைதிலி 11) மலையாளம் 12) மணிபுரி 13) மராத்தி 14) நேபாளி 15) ஒரியா 16) பஞ்சாபி 17) சமஸ்கிருதம் 18) சாந்தலி 19) சிந்தி 20) தமிழ் 21) தெலுங்கு மற்றும் 22) உருது.
இந்திய மொழிகளின் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு அவை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை: 1. இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம் 2. திராவிட மொழிக்குடும்பம் 3. ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிக்குடும்பம் 4. திபெத்திய-பர்மன் மொழிக்குடும்பம். இந்த 4 மொழிக்குடும்பங்களைப் புரிந்துகொண்டால் நாம் பெரும்பாலான இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும்.
இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம்
முதலில் இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தைப் பற்றிக் காண்போம். இது உலகில் பெரும்பாலான மக்கள் பேசக்கூடிய இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் ஒரு பகுதியாகும். இந்த மொழிக்குடும்பத்தின் முதல் மொழி சமஸ்கிருதம். ரிக் வேதம் இந்த மொழியில் எழுதப்பட்ட முதல் இலக்கியமாகும். இதனை உலகில் தோன்றிய முதல் இலக்கியம் என சிலர் குறிப்பிட்டாலும், அதனைப் பல்வேறு மொழி அறிஞர்களும் எதிர்க்கின்றனர். வேதகாலத்தில் மதச் சடங்குகளையும் அது தொடர்புடைய வழிபாட்டு முறைகளையும் மேற்கொள்வதற்கே சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பான காலம், கி.மு 1500 முதல் 1000 வரை இருந்தது. பின்னர் வேதகால சமஸ்கிருதம் பரிணாமமடைந்து இலக்கிய மொழியாக உருவெடுத்தது. கி.மு. 1000 முதல் கி.மு. 600 வரை இது நீடித்தது. சமஸ்கிருதத்தின் இந்தப் பதிப்பிலிருந்து, பாலி, பிரகிருதம் மற்றும் அப்பபிரம்ஷா மொழிகள் கி.மு 600 முதல் கி.பி. 1000 ஆண்டு காலத்தில் உருவாகின.
பாலி : கி.மு. 563 மற்றும் கி.மு. 483க்கு இடைப்பட்ட காலத்தில் புத்தர் தனது சீடர்களுக்கு இந்த மொழியில் கற்றுக் கொடுத்தார்.
பிரகிருதம் : கி.மு. 600 மற்றும் கி.பி. 1000க்கு இடைப்பட்ட காலத்தில், இலக்கியத்துக்குப் பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருதத்தில் சில வார்த்தைகள் இழந்தோ, அதன் வடிவம் மாற்றமடைந்தோ இந்த மொழி உருவானது. பல புத்த, ஜைன பிரகடனங்கள், கல்வெட்டுகள் மற்றும் நாடகங்களில் இந்த மொழி காணப்படுகிறது.
அப்பபிரம்ஷா: இந்த மொழிகள் பிரகிருதத்திலிருந்து பிறந்தவை. எனினும் இவை இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிரகிருத மொழியிலிந்து வேறுபட்டிப்பதால் அப்ப-பிரம்ஷா எனப் பெயர்பெற்றன.
நவீன மொழிகள்: இவை அப்பபிரம்ஷா மொழிகளிலிருந்து பிறந்தவை. அவற்றில் முக்கியமானவை: 1. இந்தி 2. உருது 3. பெங்காலி 4. பஞ்சாபி 5. குஜராத்தி 6. அஸ்ஸாமி 7. ஒரியா 8. மராத்தி 9. காஷ்மீரி 10. கொங்கனி 11. நேபாளி 12. சிந்தி மற்றும் பல.
1. இந்தி : தோராயமாக கி.பி. 1000 ஆண்டிலிருந்து சுமார் 65 கோடி மக்களால் இந்தி பேசப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களில் பெரும்பாலும் இம்மொழி பேசப்படுகிறது. இந்தி மொழியின் பேச்சு வழக்குகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. மேற்குப் பகுதியில் ராஜஸ்தானி, ப்ரஜா, பண்டேரி, மாலவி, போஜ்பூரி மற்றும் மேவாரி போன்ற பேச்சுவழக்குகள் உள்ளன. பெருவாரியான மக்கள் பேசுகின்ற காரணத்தால் இந்தி இந்தியாவின் தேசியமொழி எனும் தவறான கருத்தும் நிலவுகிறது. உண்மையில் இந்திய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து 22 மொழிகளும் தேசிய மொழிகள் ஆகும். குறைவான எண்ணிக்கையிலான மக்களால் பேசப்படுவதால் மற்ற மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிக்காத மனப்போக்கு நிலவுகிறது.
2. உருது : இந்தியா முழுவதும் ஆங்காங்கே 11 கோடி மக்கள் உருது பேசுகின்றனர். தென்னிந்தியாவில் அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்புக்குப் பிறகு சிப்பாய் முகாம்களிலும் கடைகளிலும் பரவலாக இம்மொழி பேசத்துவங்கப்பட்டது. ஐதராபாத் போன்ற டெக்கான் பிராந்தியங்களில் இம்மொழி டகினி என அழைக்கப்படுகிறது.
3. பெங்காலி : தோராயமாக கி.பி. 1000 ஆண்டிலிருந்து மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 30 கோடி மக்களால் இம்மொழி பேசப்பட்டு வருகிறது.
4. பஞ்சாபி : சுமார் 10 கோடி மக்களால் இம்மொழி பேசப்பட்டு வருகிறது. இதுவும் கி.பி. 1000 ஆண்டிலிருந்தே பேசப்படுகிறது.
5. குஜராத்தி : சுமார் 6.5 கோடி மக்கள் இம்மொழி பேசுகிறார்கள். இது கி.பி. 1100 ஆண்டிலிருந்து பேசப்படுகிறது.
6. அஸ்ஸாமி : சுமார் 2.5 கோடி மக்கள் இம்மொழி பேசுகிறார்கள். இது கி.பி. 1200 ஆண்டிலிருந்து பேசப்படுகிறது.
7. ஒரியா : சுமார் 4 கோடி மக்கள் இம்மொழி பேசுகிறார்கள். இது கி.பி. 1200 ஆண்டிலிருந்து பேசப்படுகிறது.
8. மராத்தி : சுமார் 8 கோடி மக்கள் இம்மொழி பேசுகிறார்கள். இது கி.பி. 1100 ஆண்டிலிருந்து பேசப்படுகிறது.
9. காஷ்மீரி : சுமார் அரை கோடி மக்கள் இம்மொழி பேசுகிறார்கள். இது கி.பி. 900 ஆண்டிலிருந்து பேசப்படுகிறது.
10. கொங்கனி : பெருமளவில் கோவாவில் வசிக்கும் மக்களாலும், மங்களூர், மும்பை மற்றும் கேரளாவில் வசிக்கும் குறிப்பிட்ட மக்களாலும் இம்மொழி பேசப்படுகிறது. சுமார் 8 கோடி மக்கள் இம்மொழி பேசுகிறார்கள். இம்மொழி பெரும்பாலும் கிறிஸ்துவ சமூகத்தினரால் பேசப்படுகிறது.
11. நேபாளி : சுமார் 1.7 கோடி மக்கள் இம்மொழி பேசுகிறார்கள்.
12. சிந்தி : நாடு முழுவதும் சுமார் 2 கோடி மக்கள் இம்மொழி பேசுகிறார்கள்.
திராவிட மொழிக்குடும்பம்
இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்திற்கு அடுத்தபடியாக, திராவிட மொழிக்குடும்பம் அளவில் பெரியது. இந்தக் குடும்பத்தில் 23 மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை: 1. தமிழ், 2. தெலுங்கு, 3. கன்னடம், 4. மலையாளம்.
1. தமிழ் : இது உலகில் தோன்றிய பழமையான மொழிகளுள் ஒன்று. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் வசிக்கும் சுமார் 8 கோடி மக்கள் இம்மொழி பேசுகிறார்கள். இம்மொழி கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தைய இலக்கியத்தொன்மை வாய்ந்தது.
2. தெலுங்கு : ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த சுமார் 8.5 கோடி மக்கள் இம்மொழி பேசுகின்றனர். இம்மொழி சுமார் 2000 ஆண்டுகளாகப் பேசப்படுகிறது.
3. கன்னடம் : சுமார் 4.5 கோடி மக்கள் இம்மொழி பேசுகின்றனர். இம்மொழி கிட்டத்தட்ட தெலுங்கு மொழியின் வரலாற்றை ஒத்தது.
4. மலையாளம்: கேரளாவைச் சேர்ந்த சுமார் 4 கோடி மக்கள் இம்மொழி பேசுகின்றனர். இது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியில் இருந்து பிறந்தது.
தமிழிலும் மலையாளத்திலும் எழுத்து வடிவங்களில் சில ஒற்றுமைகள் உள்ளன. அதே போன்றே தெலுங்கிலும் கன்னடத்திலும் உள்ளன.
ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிக்குடும்பம்
ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிக்குடும்பத்தில் இருந்து சாந்தலி, முந்தரி, ஹூ, சவாரா, கோர்க், ஜுவங், காசி, நிகோபார்ஸ் ஆகிய மொழிகள் வந்துள்ளன.
திபெத்திய-பர்மன் மொழிக்குடும்பம்.
திபெத்திய-பர்மன் குடும்பத்தில் போடோ, மணிபுரி, லுஷ்தா, கரோ, பூட்டீமா, நெவாரி, லெப்சா, அஸ்மாகா மற்றும் மிக்கிர் முதலிய மொழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
பிற்சேர்க்கை : இந்தோ-ஆரிய குடும்பத்தில் பேசப்படும் பெரும்பாலான மொழிகளுக்கு சமஸ்கிருதம் மூல மொழியாக இருக்கிறது. சமூகத்தில் இதன் பயன்பாடு குறைந்துவருவதன் காரணமாக, தற்போது தோராயமாக 15,000 மக்கள் மட்டுமே இம்மொழி பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருக்கிறது. மதச்சடங்குகளில் பெருமளவில் இம்மொழி பயன்படுத்தப்படுகிறது.
November 29, 2018 — magnon