மனித மொழிபெயர்ப்பு Vs இயந்திர மொழிபெயர்ப்பு – எது விரும்பத்தக்கது?

இயந்திர மொழிபெயர்ப்புகள் மனித மொழிபெயர்ப்புகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மனித மொழிபெயர்ப்புகளைவிட இவை விரைவாகவும் அதிகத் திறனுள்ளதாகவும் இருப்பதே இதற்குக் காரணம். இதன் விளைவாக, தங்கள் வேலைகளையும் இயந்திரங்கள் பெற்றுக்கொள்ளுமோ என பல மொழிபெயர்ப்பாளர்கள் பயப்படுகிறார்கள். இவற்றில் எது சிறந்தது என்றும் மனித மொழிபெயர்ப்புக்கும் இயந்திர மொழிபெயர்ப்புக்கும் என்ன எதிர்காலம் இருக்கிறது என்றும் நாம் பார்ப்போம்.

மனித மொழிபெயர்ப்பு

மனித மொழிபெயர்ப்பில், வார்த்தைப் பயன்பாட்டில் உள்ள வேறுபாடுகள், பழமொழிகள், தொனி, வஞ்சப்புகழ்ச்சி, நகைச்சுவை உள்ளிட்டவற்றை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். கலாச்சாரம் மற்றும் மொழி சார்ந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்கிறார்கள். ”விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்!” என்பது ஒரு பழமொழி. இதை ஆங்கிலத்தில், “The finger should have the appropriate swelling” என்று இயந்திரம் மொழிபெயர்ப்பு செய்கிறது. ஆனால், தங்களுடைய தகுதிக்கு மீறி செலவு செய்யக்கூடாது என்பதையே இந்தப் பழமொழி குறிக்கிறது.

மேற்கண்ட தமிழ் விளக்கத்தை மொழிபெயர்ப்பது சாத்தியமற்றதாகத் தெரிவதோடு, அதற்கு அறிவுப்பூர்வமான அர்த்தம் கொடுக்க நாம் அதன் சூழல்சார்ந்த மொழிபெயர்ப்பையே அங்கீகரிக்க வேண்டியதாக உள்ளது. கலாச்சாரம் சார்ந்த வார்த்தைப் பயன்பாடு, வார்த்தைகளை வரிசைப்படுத்துவதில் உள்ள வேறுபாடு உள்ளிட்டவற்றினால் இயந்திர மொழிபெயர்ப்பு செய்வதில் சிரமம் ஏற்படலாம்.

பல இயந்திர மொழிபெயர்ப்புப் பிழைகள் இரட்டை அர்த்தங்கள், தவறான புரிதல்கள் மற்றும் தவறான அர்த்தங்களைக் கொடுக்கலாம்.

இயந்திர மொழிபெயர்ப்பு

இதன் மிகப்பெரிய பலன்களில் ஒன்று இதன் வேகம். பெருநிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் எந்த ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தின் பொருளையும் வினாடிகளில் கண்டறிந்துவிடுகின்றன. இதன் காரணமாகவே, பல வணிக நிறுவனங்கள் மனித மொழிபெயர்ப்புக்குப் பதில் இயந்திர மொழிபெயர்ப்பை நாடுகின்றன.

குறைவான விலை என்பது இயந்திர மொழிபெயர்ப்பில் இரண்டாவது மிகப்பெரிய பலனாக இருக்கிறது. பணத்தை மிச்சப்படுத்தவும் மொழிபெயர்ப்பின் வேகத்தை அதிகரிக்கவும் மொழிபெயர்ப்பு சேவை வழங்குநர்கள் உட்பட பல நிறுவனங்கள் தற்போது இயந்திர மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.

மனித Vs இயந்திர மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்புத் துறையில் தானியக்கமாக்கல் தொடங்கியதில் இருந்தே இயந்திர மற்றும் மனித மொழிபெயர்ப்புகள் குறித்த விவாதங்களும் தொடங்கிவிட்டன. சிலர் இருவகை மொழிபெயர்ப்புகளின் தரம் குறித்தும் விமர்சிக்கின்றனர்.

அடிப்படை நிலையில், ஒரு மொழியின் வார்த்தைகளுக்குப் பதிலாக இன்னொரு மொழியின் வார்த்தைகளை இயந்திர மொழிபெயர்ப்பு இடம்பெயர்க்கிறது. மனிதர்களின் சரிபார்ப்பு இருந்தால் மட்டுமே இயந்திர மொழிபெயர்ப்புகளால் சிறந்த முடிவுகளை அளிக்க இயலும். மனித மொழிபெயர்ப்பாளர்களால் மட்டுமே பேச்சுவழக்கில் மொழிபெயர்க்க இயலும், இயந்திரங்களால் அது இயலாது.

இயந்திர மொழிபெயர்ப்பில் சந்தை நிலவரம்

இயந்திர மொழிபெயர்ப்புச் சந்தை 2020 ஆம் ஆண்டு 153.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு உடையதாக இருந்தது, 2026 ஆம் ஆண்டு அது 230.67 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2021-2026 ஆம் ஆண்டின் 7.1% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

வளர்ந்துவரும் உலகமயமாக்கலின் சூழலில் எழுத்துப்பணிகளை உள்ளூர்மயமாக்கலுக்கான தேவைகளும், அதற்குத் தேவைப்படும் அதிவேகமான, சிக்கனமான மொழிபெயர்ப்புகளும் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக விவரிக்கப்படுகின்றன. இத்தகைய தேவையை கணிப்பொறி உதவியுடனான மொழிபெயர்ப்புக் கருவிகள் (CAT tools) நிறைவேற்றுகின்றன. உயரிய துல்லியத்தை அடைவதற்காக மேம்படுத்தப்பட்ட மெஷின் லேர்னிங் அமைப்புகள் மூலமாக இந்தக் கருவிகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்படுகின்றன.

நரம்பியல் இயந்திர மொழிபெயர்ப்பில் (Neural Machine Translation) காணப்படும் வளர்ச்சி இயந்திர மொழிபெயர்ப்பில் ஆர்வமூட்டும் புதிய வாய்ப்புகளை அளிக்கிறது. இவ்வகையான தானியக்கமாக்கலில் செயற்கை நரம்புகளினாலான நெட்வொர்க்கின் மூலம் பெருமளவிலான தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஒரே ஒருங்கிணைக்கப்பட்ட மாதிரியின் கீழ் வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களின் தொடர்ச்சி கணிக்கப்படுகின்றது. சுருக்கமாக இதை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்று கூறலாம்.

பெருவாரியாக இயந்திர மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துவதன் காரணமாக உலகளவில் இயங்கிவரும் நிறுவனங்கள் வணிகச் சந்தையில் புதிய பிரிவுகளில் தங்கள் இருப்பை விரிவாக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இயந்திர மொழிபெயர்ப்பின் குறைகள்

1. உணர்வுகள், கலாச்சார எதிர்பார்ப்புகள், சூழ்நிலைகள் போன்றவற்றை இயந்திரங்களால் சிறப்பாகப் புரிந்துகொள்ள இயலாது.

2. இயந்திர மொழிபெயர்ப்புகள் சூழ்நிலைகளைக் கருத்தில்கொள்வது இல்லை.

3. இயந்திர மொழிபெயர்ப்புகள் 100% துல்லியமாக இருப்பதில்லை.

4. மொழிகளுக்கு வெவ்வேறு இலக்கணக் கட்டமைப்புகளும் சொற்களஞ்சியங்களும் உள்ளன, ஒரே கருத்தை வெளிப்படுத்தும் விதங்கள் வேறுபடுகின்றன, இந்தக் கருத்தாக்கங்களை இயந்திரங்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

கடைசியாக…

இயந்திரங்கள் கணக்குகளின் அடிப்படையில் செயல்படுகின்றன, மனிதர்களோ மொழி மற்றும் கலாச்சார எல்லைகளைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். இயந்திரங்களால் வேறு மொழிகளில் உள்ள சிறு வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள இயலாது, அவற்றில் மனிதர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.

மொழிபெயர்ப்புத் தரத்தையும் துல்லியத்தன்மையையும் கருத்தில்கொள்ளும்போது, இயந்திரங்களால் இன்னும் சில காலத்திற்கு மனிதர்களின் மொழிபெயர்ப்பு வேலைகளை எடுத்துக்கொள்ள முடியாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *