21ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சி

Written by: Shankar and Kalaiyarasan

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

         இனிதாவது எங்கும் காணோம்;

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

          பரவும்வகை செய்தல் வேண்டும்.

பாரதியாரின் இந்தப் பாடல் வரிகள் தமிழ் மொழியை உலகம் எல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்கின்றன. அதற்கேற்ப தமிழ் மொழியும் பல்வேறு காரணிகள் மூலம் வளர்ச்சி அடைந்து உலகமெங்கும் பரவிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் தமிழ் மொழி அடைந்து வரும் பரிணாம வளர்ச்சி. மாறும் சூழலுக்கு ஏற்ப மனிதர்களும் விலங்குகளும் தங்களை மாற்றிக்கொள்வதையே பரிணாம வளர்ச்சி என்கிறோம். உதாரணமாக சூரிய ஒளி செல்ல முடியாத ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்களுக்குக் கண்கள் இருப்பதில்லை, மாறாக அவற்றின் காதுகள் ஒலியைக் கொண்டு இரையை அடையாளம் காணும் திறனை அதீதமாகக் கொண்டு இருக்கின்றன. நம்மை எல்லாம் வீட்டுக்குள் பூட்டி வைத்த கொரோனா வைரஸும் கூட ஆண்டுதோறும் வெவ்வேறு புதிய பல அம்சங்களைத் தனக்குள் பெற்று பரிணமிக்கிறதை நாம் காண்கிறோம். பஜாவ் என்னும் ‘கடல் நாடோடிகள்’ இனத்தைச் சார்ந்த மக்கள் கடலுக்கு அடியில் 13 நிமிடங்கள் வரை மூச்சுவிடாமல் தாக்குப்பிடிக்கும் திறனைக் கொண்டுள்ளார்கள், சாதாரண மக்கள் 5 நிமிடம் கூட தாக்குப்பிடிக்க இயலாது. அதற்காக பஜாவ் மக்களின் உடலில் சாதாரண மனிதர்களை விட 50% பெரிய அளவிலான மண்ணீரல் இருக்கிறது. ஒரு முட்டையில் இருந்து வெளிவரும் கம்பளிப்பூச்சி, இலைகளைத் தின்று, கூட்டுப்புழுவாக மாறி, பலகாலம் காத்திருந்து பட்டாம்பூச்சியாக வெளிவருகிறது.  இதே போல தமிழ் மொழியும் பல்வேறு வகைகளில்  பல்வேறு படிநிலைகளைக் கடந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதை நம் கண்முன்னே காணலாம். அத்தகைய பரிணாம வளர்ச்சி எந்தெந்த வகையில் நிகழ்ந்துள்ளது என்பதைப் பின்வரும் பத்திகளில் காண்போம். 

சமூக சிந்தனையினால் ஏற்பட்ட வளர்ச்சி:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் கூறுவதைப் போல, “ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி” அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் பயன்படுத்தும் மொழிக்கும் பொருந்தும். ஒரு மொழி தன்னைச் சுற்றி இருக்கும் மக்களின் சமூகப் பார்வைக்கு ஏற்றவாறுதான் மாற்றம் பெறுகிறது. 

மனிதன் தன்னைப் பற்றியும் தன்னைவிட வித்தியாசமாக இருக்கும் பிற மனிதர்களைப் பற்றியும் சமூகக் கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறான். அவ்வகையில் ஔவையார் காலத்தில் “கூன், குருடு, செவிடு” என்று பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் சக மனிதர்களை எந்த அளவுக்குப் புண்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொண்ட தமிழ் அறிஞர்கள் “உடல் ஊனமுற்றோர்” என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினர். ஆனால், இந்த வார்த்தையும் புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதை அறிந்த பிறகு, எல்லோரையும் போன்ற உடல் உறுப்புகள் இல்லாவிட்டாலும் அதற்கு மாற்றாக வேறு திறன்களைக் கொண்டு அவர்கள் செயல்படுகிறார்கள் என்கிற கண்ணோட்டத்தில்  “மாற்றுத் திறனாளிகள்” என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இதே போல, அலி, அன்னகர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களைத் தற்போது திருநபர், திருநம்பி, திருநங்கை என்கிற வார்த்தைகளாலும், மூன்றாம் பாலினத்தவர் என்கிற வாக்கியத்தாலும் குறிப்பிடுகின்றனர். காலப்போக்கில் நம்மைச் சுற்றி இருப்பவர்களைக் குறித்த புரிந்துகொள்ளுதல் அதிகரிக்கும்போது தமிழ் தொடர்ந்து வளரும், வளர வேண்டும் என்பதே தமிழ் வளர்ச்சியை விரும்புகிறவர்களின் ஆவலாக உள்ளது. 

நம்மைச் சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்ட வளர்ச்சி

முற்காலத்தில் தமிழ் வார்த்தைகளோடு சமஸ்கிருத வார்த்தைகள் பெரும்பாலும் கலந்து இருந்தன. மத நூல்களும் பெரும்பாலும் சமஸ்கிருதக் கலப்போடு இருந்தன. ஷ, ஸ, ஜ, போன்ற சமஸ்கிருத எழுத்துகள் தமிழில் அதிகம் புழக்கத்திற்கு வந்ததும் அந்தக் காலகட்டத்தில்தான். 

காபி, சைக்கிள், குக்கர், பெடல், போன்ற பல வார்த்தைகள் தற்போது தமிழ் வார்த்தையாகவே மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இவை மட்டுமில்லாமல் லாந்தர்  விளக்கு, ஆசுபத்திரி, பீரோல், பொத்தான் போன்ற பிரெஞ்சு மொழி வார்த்தைகள், தொப்பி, பப்ளிமாஸ் உள்ளிட்ட டச்சு மொழி வார்த்தைகள், கடுதாசி, பேனா, வாத்து, அலமாரி, மேசை, சாவி, கோப்பை உள்ளிட்ட போர்த்துகீசிய வார்த்தைகள், அக்கப்போர், அகங்காரம், ராட்டினம், அலாதி, இனாம் போன்ற உருது வார்த்தைகள், துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட துருக்கி வார்த்தைகள், திவான், சர்தார் போன்ற பாரசீக வார்த்தைகள், இலாகா, ரத்து, தணிக்கை, மகசூல் உள்ளிட்ட அரபு மொழி வார்த்தைகள், சாம்பார், பேட்டை, தெம்பு உள்ளிட்ட தெலுங்கு மொழி வார்த்தைகள், கில்லாடி, கிச்சடி உள்ளிட்ட மராத்திய மொழி வார்த்தைகள், சாயா, பைசா உள்ளிட்ட இந்தி மொழி வார்த்தைகள், அட்டிகை, குலுக்கல் உள்ளிட்ட கன்னட மொழி வார்த்தைகள், அவியல், தளவாடம் உள்ளிட்ட மலையாள மொழி வார்த்தைகள், பீங்கான், சாம்பான் உள்ளிட்ட சீன மொழி வார்த்தைகள் என பல்வேறு மொழிகளில் இருந்து தமிழ் மொழியில் பல வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  எந்த மொழியில் வேலைவாய்ப்பு அதிகமோ, எழுத்துகளோடும் வார்த்தைகளோடும் தமிழுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேற்று மொழிகளுக்குச் சொந்தமானவர்களின் பண்பாடும் சற்று தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றன. எந்த மொழி படித்தால் நம்மோடு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுடன் எளிதாக உரையாட முடியுமோ அந்த மொழிகளில் உள்ள வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளாகவே ஏற்றுக்கொள்ளப்படுதல் அந்தந்தக் காலகட்டத்திற்கான பரிணாம வளர்ச்சியாகவே கருதப்படலாம்.

தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட வளர்ச்சி

கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடுகளிலும் இருந்த தமிழ்மொழி நாம் தற்போது பயன்படுத்தி வரும் கம்ப்யூட்டர்களிலும் மொபைல் திரைகளிலும்  இன்று பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு அறிஞர்களின் நீண்ட கால உழைப்பு அடங்கி இருக்கிறது. உதாரணமாக, இந்திய தேசம் முழுவதிலும் பரவிக் கிடந்த பிராமிக் கல்வெட்டுகளில் இருந்த தமிழ் எழுத்துகளை வரிசைப்படுத்தியவர் திரு.ஐராவதம். இந்த எழுத்துகள் செமிடிக் மொழிகளுக்கு ஒத்த வரிவடிவத்தைப் பெற்று இருந்தன. அதன் பின்னர் ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களிலும், அசோக மன்னர் காலத்து ‘கிர்னார்’ கல்வெட்டுகளிலும், நந்தி வர்ம பல்லவனுடைய கல்வெட்டுகளிலும் இருந்து கண்டறியப்பட்ட தகவல்களின்படி தமிழ் மொழி இந்தியா முழுவதிலும் பயன்படுத்தப்பட்ட மொழியாக நமக்குத் தெரிய வருகிறது. திரு.ஐ.எம்.போங்கார்டு லெவின் மற்றும் திரு.என்.வி.குரோ உள்ளிட்ட அறிஞர்களும் இதை உறுதிசெய்துள்ளனர். பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும் தந்தை பெரியார் தமிழைத் தட்டச்சு செய்வதில் உள்ள சிரமங்களையும், அதனால் அவருடைய கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வதில் ஏற்பட்ட சிரமத்தையும் கருத்தில்கொண்டு தமிழ்மொழியின் எழுத்துவடிவங்களில் சில மாற்றங்களைச் செய்யுமாறு வலியுறுத்தினார். அறிவுறுத்தலின்படி வரிவடிவத் தமிழில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதால், இன்று தமிழை நாம் உலகெங்கும் கொண்டு செல்ல இயல்கிறது. 

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு கருவிகளைத் தமிழ் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிய காரணத்தால் தமிழில் புதிதாக பல வார்த்தைகளும் உருவாக்கப்பட்டன. உதாரணமாக, விசைப்பலகை, இணையம், வலைதளம் உள்ளிட்ட வார்த்தைகள் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டன. தமிழ் வழிக் கல்வியிலும் மாணவர்களின் புரிதலுக்காக இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட பாடங்களில் பல்வேறு அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வேற்று மொழி வார்த்தைகளை நேரடியாக தமிழில் ஏற்றுக்கொண்டும், தமிழ் மொழிக்கென்றே புதிதாக வார்த்தைகளை உருவாக்கிக்கொண்டும் தமிழ் மொழி வளர்ந்து வருகிறது. எந்த இடத்தில் எந்த வார்த்தை தமிழ் மக்களுக்கு எளிதாகப் புரியும் என்பதை மனதில் வைத்து அதற்கேற்றபடி சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவது தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். 

முடிவுரை:

ஒரு பெண் பேதையாய், பெதும்பையாய், மங்கையாய் மடந்தையாய், அரிவையாய், தெரிவையாய், பேரிளம்பெண்ணாய், மூதாட்டியாய் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு படிப்பினைகளைப் பெற்று வளர்ச்சி அடைகிறாள். அதுபோலவே,  பரிணாம வளர்ச்சி கண்ட அனைத்து மொழிகளும் முதலில் சைகையாகவும், பின்னர் ஒலி வடிவங்களாகவும், அதன் பின்னர் வரிவடிவம் பெற்று கல்வெட்டுகளாகவும், ஓவியங்களாகவும், பல்வேறுபட்ட சுருள்களாகவும், காகிதமாகவும், கணினியில் டிஜிட்டல் மயமாகவும் வளர்ச்சி அடைந்து உள்ளன.  இதன் அடுத்த கட்டமாக இயந்திரங்கள் நம்மிடம் இருந்து கற்கும் மொழியாக அவை பரிணமிக்கும். அவ்வகையில் தமிழ் மொழி இந்தப் பருவங்கள் அனைத்திலுமே தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. பூமியில் இருந்து வானலோகத்திற்கு அனுப்பப்படும் ஒரு ராக்கெட் எவ்வாறு போகும் வழியெல்லாம் தனக்குத் தேவை இல்லாதவற்றைத் தன்னிடம் இருந்து அகற்றிச் செல்லுமோ, ஒரு குழந்தை எப்படி தினமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டு அறிவாற்றல் பெறுமோ அதுபோலவே தமிழும் தொடர்ந்து பயனுள்ள மாற்றங்களைப் பெற்று வளர வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். வாழ்க தமிழ்! வாழ்க பல்லாண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *