புதிதாக மொழிபெயர்ப்பை நாடும் நிறுவனங்களுக்கான சில குறிப்புகள்

Written by: Ranjith Sreenivas

மொழிகளை மனிதர்களாக உருவகித்துக் கொண்டால், ’ஆங்கிலம்’ மரியாதையான தூரத்துடன் பழகும் அலுவலக நண்பராக இருக்கும், அதே நேரம் நம் தாய்மொழியானது சுகதுக்கங்களிலும் ஏற்றத்தாழ்வுகளிலும் பங்கேற்கும் உற்ற தோழனாகப் பார்க்கப்படும். பெரும்பாலும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இத்தகைய தோழர்களாகவே காட்சியளிக்க விரும்புகின்றன. நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் வெறும் தகவல்களைக் கூறாமல் அவற்றை அவர்களுக்கு சுவாரசியமாகக் கொண்டு செல்ல விரும்புகின்றன. பல மொழிகளைச் சார்ந்தவர்களுக்கு இனிமையான அனுபவத்தை அளிக்க பல மொழிபெயர்ப்புகள் தேவைப்பட்டால், அதற்கான முயற்சியில் ஈடுபடுவதே சரியாக இருக்கும். 

’உள்ளூர்மயமாக்கல்’ என்பது வார்த்தைக்கு வார்த்தை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்காமல், கலாச்சாரப் பின்னணிகளைக் கருத்தில்கொண்டு மறு உருவாக்கம் செய்தல் ஆகும். வாடிக்கையாளரின் ஈடுபாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் உள்ளூர்மயமாக்கல் நடவடிக்கைகள் மிகப்பெரும் மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றன. உரையாடல்கள் பொதுப்படையாக மக்களை நோக்கிய குரலாக இருந்த காலத்திலிருந்து உருமாறி தற்போது ஒவ்வொரு தனிநபரையும் மையப்படுத்தி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புதிய போக்கு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகச் செய்யப்படவில்லை, மாறாக  இதுவே இன்றைய வணிக உலகில் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. தொழில் போட்டி அதிகரித்து வரும் காலகட்டத்தில், சந்தையில் தனது இருப்பைத் தக்கவைக்க முனையும் போராட்டங்களுக்கு இடையில் தனித்தன்மையை உருவாக்கி வெளிப்படுத்துவது சவாலானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வெற்றிகரமாக மொழிபெயர்ப்பு உத்திகளை அமைத்துக்கொள்ளும்  நிறுவனத்திற்கு இதுவரை திறக்காத சந்தை வாய்ப்புகள் திறப்பதோடு ஏற்கெனவே இருக்கும் சந்தைகளில் வேறு நிறுவனங்களில் இல்லாத தனித்தன்மையும் சேர்ந்து வளர்கிறது. ஆனால், இவற்றைச் சொல்வது எளிது செய்வது கடினம். மொழியாக்க நடவடிக்கைகளில் நிறுவனங்கள் எந்த வகையான சிக்கல்களைச் சந்திக்கின்றன?  நிறுவனங்களையும் மொழிகளையும் பற்றி எங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த புரிதலுடன் இங்கே முக்கியமான ஐந்து சவால்களைப் பட்டியலிட்டுள்ளோம்.

மொழி வடிவிலான படைப்பின் முழுமையான கட்டுப்பாட்டை விட்டுக்கொடுப்பது

உள்ளூர்மயமாக்கல் என்பது முற்றிலும் புதியதொரு முயற்சி இல்லை. மாறாக பல்வேறு காலங்களாகப் பத்திரிகைத் துறையிலும் பதிப்பகத் துறையிலும் ஒரு படைப்பைப் பல மொழிகளில் மொழிபெயர்த்தல் என்பது தொடர்ந்து வெற்றிகரமாகச் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களின் தொழிலுக்கு மூலதனமே மொழிவடிவிலான படைப்புத்திறன்தான் என்பதனால் மொழிபெயர்ப்பிலும் உள்ளூர்மயமாக்கும் நடவடிக்கைகளிலும் இருக்கும் சிரமங்களை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். புதிதாக மொழிபெயர்ப்பதில் ஈடுபடும் பெரும்பாலான நிறுவனங்களின் முதன்மையான சேவையாக ’மொழியாக்கம்’ இல்லாவிட்டாலும்  வாடிக்கையாளர்களை மகிழ்விக்க முக்கியமானதொரு  அம்சமாக இது இருக்கிறது. இதனாலேயே நிறுவனத்தினுள் முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்கள் ஒருவிதப் பதட்டம் அடைகின்றனர். ஒரு செய்தியை வேறு மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு செல்லும்போது நிறுவனங்கள் அந்தச் செய்தியின் மீதான கட்டுப்பாட்டைக் கொஞ்சம் விட்டுக்கொடுக்க வேண்டி வருகிறது. தங்களுக்குப் புரியாத மொழியில் தங்கள் நிறுவனத்தின் மையச் செய்தி எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை அவர்கள் எப்படிப் புரிந்துகொள்வது? இந்தச் சிக்கல் இருப்பதாலேயே  துணிந்து செயல்படாமல் பலரும் பாதுகாப்பாக இருக்கவே விரும்புகின்றனர். இந்தப் பதட்டத்தைக் கடக்கத் துணியும் நிறுவனங்களே தங்கள் சார்பாகப் பேசுவதற்குச் சரியான மொழிபெயர்ப்பு நிறுவனங்களைக் கண்டறிகின்றனர்.

எதற்கு முன்னுரிமை அளிக்கலாம் என்கிற கேள்வி

ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்வதற்குப் பலவகையான வழிகளை வைத்திருக்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் தனித்துவமான அனுபவத்தைத் தரக்கூடிய அளவுக்குப் பணமோ ஊழியர்களோ உத்வேகமோ பெரும்பாலான நிறுவனங்களிடம் இருப்பதில்லை. இதனாலேயே ”எங்கு, எவ்வாறு தொடங்க வேண்டும்?” என்பதை நிறுவனங்கள் தீர்மானிக்க வேண்டும். இதைச் செய்ய, ஒவ்வொரு நிறுவனமும் மொழி அனுபவத்தின் பார்வையில் தொடர்பு முறைகளைக் கவனமாகப் பரிசோதித்து எங்கே அதன் பலன் அதிகமாக இருக்கும் என்பதைக் கண்டு உணர வேண்டும். வெளிப்படையாகத் தெரியக்கூடிய அனுபவத்தை வழங்கும் தொடர்பு முறைகளே பெரும்பாலும் அதிகப் பலனை ஏற்படுத்தக்கூடியவை. இவை ஒரு விளம்பரமாகவோ, வலைதளத்தின் முகப்புப் பக்கமாகவோ அல்லது தயாரிப்பில் பயனரோடு தகவல் பரிமாறும் திரையாகவோ இருக்கலாம். இந்தத் தொடர்பு முறைகள் வாடிக்கையாளர்களை உடனடியாக ஈர்ப்பதோடு, மேலும் இதே போன்ற அனுபவங்களை எதிர்பார்க்கும்படி தூண்டுவதாகவும் இருக்கும். நல்லதொரு மொழிபெயர்ப்பு உத்தியை அதிகம் பலனளிக்கும் இடங்களில்  தொடங்க வேண்டும். பின்னர் இந்த அனுபவத்தை முழுவதுமாக மறு உருவாக்கம் செய்து அசல் மொழியில் அது ஏற்படுத்திய உணர்வை வேறு பல மொழிகளிலும் ஏற்படுத்துமாறு அமைக்க வேண்டும்.

சரியான மொழிபெயர்ப்புக் கூட்டாளர்களை அடையாளம் காணுதல்:

அனைத்து நிறுவனங்களாலும் மொழி மற்றும் கலாச்சார நிபுணர்களை முழுநேரப் பணியில் வைத்துக்கொள்ள இயலாது. சரியான மொழிபெயர்ப்புக் கூட்டாளர்களை அடையாளம் காண்பதில்தான் மொழியாக்கத் திட்டத்தின் வெற்றி அடங்கியுள்ளது. நாங்கள் மிகக் கவனமாகவே ‘கூட்டாளர்’ என்னும் சொல்லைக் கையாள்கிறோம். ஏனென்றால், இந்தப் பணியை மேற்கொள்வதற்கு அதுவே சிறந்த அணுகுமுறையாக இருக்கும். ஒரு தலைசிறந்த நிறுவனம் அவர்களது வணிகத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு அதைப் பிரதிபலிக்குமாறு பணியாற்றும் நிறுவனத்துடன் கூட்டாளராக இணைந்து செயல்படும். அவ்வாறு செய்தால் நிறுவனத்தின் எண்ண ஓட்டத்துடன் கூட்டாளர் நிறுவனங்கள் இணைந்து கொள்வது எளிதாக இருக்கும். இருதரப்பினரும் அதிகப் பொறுப்புடன் செயல்படும்  இடங்களில் முயற்சியும் ஒன்றுபோல இருக்கும். அதே நேரம் வெறும் வணிகத்தை நோக்கமாகக் கொண்டு ஏற்படும் உறவென்பது அதைத்தாண்டி வளராமல் நின்றுவிடும்!

உள்ளூர்மயமாக்கலுக்கும் மொழிபெயர்ப்புக்குமான வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளுதல்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள வாசகத்தைப் படித்துப் பாருங்கள்: 

There is no set rule that a well-set brand should rule a market like a monopoly. In fact there is a thumb rule that states that any brand that tries to do so will only fall like a set of cards. 

மொழிபெயர்ப்பு:

 நன்கு வேரூன்றிய நிறுவனங்கள் சந்தையில் தனி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை . உண்மையில், அவ்வாறு செய்யத்துடித்த நிறுவனங்கள் சீட்டுக்கட்டு போல்  சரிந்துள்ளன என்று ஒரு கோட்பாடு இருக்கிறது. 

இங்கே ஆங்கிலத்தில் இருக்கும் மேற்கோள் வாசகத்தைப் படித்துப் பாருங்கள். ‘Set’ மற்றும் ‘Rule’ என்னும் வார்த்தைகள் மூன்று வெவ்வேறு இடங்களில் மூன்று வெவ்வேறு அர்த்தங்களில் வந்துள்ளன.மொழிபெயர்ப்பாளர் அந்த வாக்கியத்தில் இருக்கும் அர்த்தத்தை உள்வாங்காமல் வார்த்தைகளை மொழிபெயர்க்கும்போது, படித்தால் சிரித்துவிடக் கூடிய வகையில் தான் வாக்கியம் அமைந்திருக்கும். அதே நேரம், கலாச்சாரத்தையும் மொழியையும் ஆழமாகப் புரிந்துகொண்ட மொழிபெயர்ப்பாளர், அதன் அர்த்தத்தை உள்வாங்கிக்கொண்டு அதைத் தனது மொழியில் எப்படிக் கூற வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவார். மொழி என்பது வேடிக்கையான ஒன்று. அதைத் தவறாக பிரயோகிக்கும் போது கண்டிப்பாக கேலிக்குரியதாகவே இருக்கும். அவ்வாறு நடந்தால் வெளியுலகத்திற்குக் கேலியாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தலைகுனிவாகவுமே இருக்கும். மேலும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்தத் துறையில் இயந்திரங்கள் மனிதர்களைவிட இன்னமும் அதிகத் திறமை பெற்றுவிடவில்லை. நோக்கத்தை வெளிப்படுத்துவதற்கு உதவிய ’வார்த்தைகளை’ மொழிபெயர்க்காமல், அடிப்படை ’நோக்கத்தை’ மொழிபெயர்ப்பதே மிகவும் சிறந்த அணுகுமுறை ஆகும்.

நல்ல தரத்துடன் சிறப்பான செயல்திறனையும் அடைவது

வெற்றிகரமான வணிகங்கள் தங்களது செயல்திறனை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டே இருக்கும். வேண்டாத பழக்கங்களைக் களைவதற்கும், சிறப்பானவற்றை உள்வாங்கி செயல்படுத்துவதற்கும், சில செயல்முறைகளைத் தானியக்கமாக மாற்றுவதற்கும்,  வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிவதற்கும் ஏதாவது ஒரு வாய்ப்பு எப்போதுமே இருக்கும். மொழிபெயர்ப்புத் துறையில் கணினி உதவியுடனான மொழிபெயர்ப்புர்ப்பு (CAT-Computer Aided Translation) மிகச் சிறந்த மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. மொழி என்பது கலை என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் மொழிபெயர்ப்புத் துறையின் பின்னால் அறிவியலும் இயங்குவதால் இதில் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகுதியாகவே காணப்படுகின்றன. புதிதாக மொழிபெயர்ப்பை நாடி வரும் நிறுவனங்களுக்கு இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாகவும் எளிதானதாகவும் இருக்கும். உங்களுடைய தேவைகளை உணர்ந்து தொழில்நுட்ப ரீதியான அணுகுமுறையை உருவாக்கிச் செயல்படுத்துவதற்கான திறன் உங்களது கூட்டாளர் நிறுவனத்திடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இங்கே கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகக் கருத்தில் கொள்ளும்போது உங்கள் நிறுவனத்தின் படைப்புகளை உள்ளூர்மயமாக்குதல் புத்திசாலித்தனமான யோசனையாகவே இருக்கும். உங்கள் நிறுவனம் சரியான திட்டத்துடனும் சரியான கூட்டாளருடனும் இணைந்திருப்பதை மட்டும் உறுதிசெய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *